25 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் சிட்கோ தொழிற்பேட்டை

மானாமதுரையை அடுத்த சோமநாதபுரத்தில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1993-ம் ஆண்டு சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. முத்தனேந்தல், இடைக்காட்டூர், ராஜகம்பீரம், துத்திகுளம், கட்டிகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு இந்த சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. தொழிற்பேட்டை தொடங்கியபோது ஏராளமான தொழில் முனைவோர் தொழில் தொடங்க முன்வந்தனர். தண்ணீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி இருப்பதால் அவர்கள் ஆர்வத்துடன் இங்கு தொழில் தொடங்க வந்தனர். ஆனால் அதிகாரிகளின் அலட்சியம், நிபந்தனைகள் காரணமாக பலரும் பின்வாங்கிவிட்டனர். இதனால் கடந்த 25 ஆண்டுகளாக இந்த சிட்கோ தொழிற்பேட்டை பயன்பாடின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

தற்போது மதுரை-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருவதால் தொழில் முனைவோர்களை கவருவதற்காக தொழிற்பேட்டையில் தார்ச்சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இத்தனை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாலும் தொழிற்பேட்டையில் அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை. இதனால் தொழில் முனைவோர்கள் மீண்டும் பின்வாங்கும் நிலை உள்ளது. சிட்கோ தொழிற்பேட்டையை புதுப்பிக்க தற்போது அரசு நிதி ஒதுக்கியதை அடுத்து அங்குள்ள கருவேல மரங்கள் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

எனவே போதிய மழையின்றி, விவசாய வேலைகளும் இன்றி கிராமப்புற இளைஞர்கள் தவித்து வரும் வேளையில் சிட்கோ தொழிற்பேட்டை செயல்பட தொடங்கினால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் சிட்கோ தொழிற்பேட்டை முழுமையான அளவு இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Popular posts from this blog

PROFILE